சாலையோர குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ்: பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் அருகே சாலையோர குடியிருப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் மா


தஞ்சாவூர் அருகே சாலையோர குடியிருப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரண்டனர்.
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாபநாசம் அருகேயுள்ள வடபாதி, அருந்தவபுரத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் அளித்த மனு:
வடபாதி, அருந்தவபுரத்தில் சாலையோர குடியிருப்புகளில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக 188 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை 7 நாட்களுக்குள் இடித்து இடத்தைக் காலி செய்து கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலர்கள் நவ. 7-ம் தேதி நோட்டீஸ் கொடுத்தனர்.
இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் தினக் கூலி வேலை பார்த்து வருகிறோம். மேலும் யாருக்கும் சொந்த நிலமோ, இடமோ கிடையாது. அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். எனவே, எங்களது வாழ்வாதாரத்துக்கு மாற்று வழிவகை செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல, தஞ்சாவூர் அருகே திட்டை பகுதியில் உள்ள கோணியக்குறிச்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் அளித்த மனு:
கோணியக்குறிச்சி சாலைத் தெருவில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு வந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வீடுகளை இடிக்க உள்ளோம் என்றும், 15 நாட்களுக்குள் காலி செய்து கொள்ள வேண்டும் எனவும் நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், எங்களிடம் கையொப்பமும் பெற்றுச் சென்றனர். இதனால், வறுமைக் கோட்டுக் கீழ் வாழும் சுமார் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த இடத்தை விட்டால் வேறு தங்குவதற்குக் கூட இடம் இல்லை. எனவே, அப்பகுதியிலேயே வீடு கட்டி மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி. பக்கிரிசாமி தலைமையில் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்காடு கிராம மக்கள் அளித்த மனு:
நடுவிக்காடு கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். குடியிருக்கும் வீடுகளுக்கு வரி செலுத்துகிறோம்.
இந்நிலையில், இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையில் இருந்து அக். 30-ம் தேதி நோட்டீஸ் வந்துள்ளது.
இதனால், மிகுந்த மன வேதனைக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம். எனவே, அதே இடத்துக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம் தேவை
மேலும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவகுமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர் ஜெ. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் செங்கிப்பட்டி பகுதி மக்கள் அளித்த மனு:
செங்கிப்பட்டி பகுதி, சுற்றியுள்ள 50 கிராமங்களுக்குச் சந்தைப் பகுதியாக உள்ளது. ஆனால், செங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பூதலூர், தஞ்சாவூருக்குச் செல்லும் நிலை உள்ளது. இதனால், வயதானவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, செங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com