கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர்

கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை குழு,  தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குழு, பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கும் குழு, போக்குவரத்து மேலாண்மைக் குழு, நீர் வழி மேலாண்மைக் குழு, செய்தி மேலாண்மைக் குழு, சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மைக் குழு என 7 மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வருவாய் கோட்ட அளவில் மூன்று குழுக்களும்,  வட்ட அளவில் 9 குழுக்களும், சரக அளவில் 50 குழுக்களும், கடலோர வட்டங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 குழுக்கள் வீதம் 27 கிராமங்களில் 135 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் 1,932 முதல் நிலை உதவியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  
காவல் துறையைச் சேர்ந்த 66 பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்ட 4 பேரிடர் மீட்பு குழுவினரும்,  புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பணியாற்றக்கூடிய 161 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் 24 படகுகள், அவசர கால ஊர்திகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. புயல் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை தங்க வைக்க 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்கள், 28 இதர நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், அரசுப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், கிராம சேவை மையங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகளைப் பாதுகாக்க 195 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை உதவியாளர்களும், 36 பாதுகாப்பு மையங்களும், 131 கால்நடை பராமரிப்பு குழுக்களும், புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் 42,000 மணல் மூட்டைகள், 134 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 50 பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


புகார் தெரிவிக்கலாம்
புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம். 
மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை தஞ்சாவூர் வட்டத்தில் 04362 - 230456 என்ற எண்ணிலும், திருவையாறு வட்டத்தில் 04362 - 260248 என்ற எண்ணிலும், பூதலூர் வட்டத்தில் 04362 - 288107 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 04372-233225 என்ற எண்ணிலும், கும்பகோணம் வட்டத்தில் 0435-2430227 என்ற எண்ணிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 0435 - 2460187 என்ற எண்ணிலும், பாபநாசம் வட்டத்தில் 04374-222456 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 04373 - 235049 என்ற எண்ணிலும், பேராவூரணி வட்டத்தில் 04373 - 232456 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com