கஜா புயல் சேத விவரங்கள் கணக்கெடுப்பு: தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தது:
மாவட்டத்தில் தொடக்க நிலை விசாரணை அடிப்படையில் 3 பசுக்கள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 22 வீடுகள் பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினத்தில் படகுகள் சேத விவரங்கள் குறித்து மீன் வளத் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கெடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 164 மி.மீ.-ம், குறைந்தபட்சமாக குருங்குளத்தில் 16 மி.மீ.-ம் மழையளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி,  சேதுபாவாசத்திரம்,  மதுக்கூர், ஒரத்தநாடு ஆகிய வட்டாரங்களில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்து கும்பகோணம்,  திருவிடைமருதூர் வட்டாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 72 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,800 ஆண்கள், 4,250 பெண்கள், 1,310 குழந்தைகள் என மொத்தம் 9,360 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
விரைவில் மின்சாரம்: மாவட்டத்தில் 5,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது, 3,300 மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. மேலும்,  சென்னையிலிருந்து மின் வாரிய சிறப்புக் குழுவினரை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. எனவே, விரைவில் மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com