"கஜா'வின் கோரத் தாண்டவம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 பேர் சாவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலால் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய கஜா புயலால் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள்,  ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து, படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையும் பெய்தது. இந்நிலையில்,  பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மணிக்கு 111 கி.மீ. வேகத்தில் கடும் புயல் வீசியது.
இதனால், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 164 மி.மீ.-ம், பேராவூரணியில் 144 மி.மீ.-ம், பட்டுக்கோட்டையில் 143 மி.மீ.-ம் மழையளவு பதிவானது.
இந்த புயல் காரணமாக,  பட்டுக்கோட்டை,  பேராவூரணி,  சேதுபாவாசத்திரம்,  மதுக்கூர்,  ஒரத்தநாடு ஆகிய வட்டாரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இதற்கு அடுத்த நிலையில்,  தஞ்சாவூர், கும்பகோணம்,  திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, அதிராம்பட்டினத்தில் ஏராளமான மாடி வீடுகள் பகுதியாகவும், சில இடங்களில் முழுமையாகவும் சேதமடைந்தன. இதேபோல, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மதுக்கூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓடு வேயப்பட்ட வீடுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. பலத்தக் காற்று காரணமாக ஓடுகள் பறந்தன. கூரை வீடுகளிலும் சுவர் இடிந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தின. தகரங்கள், தகடுகள் உள்ளிட்டவை பலத்தக் காற்றுக் காரணமாக பல அடி தொலைவுக்கு வீசப்பட்டன.
18 பேர் சாவு: பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை கிராமத்தில் வேல்முருகன் வீட்டுச் சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேல்முருகனின் மகன்கள் சதீஷ் (22), ரமேஷ் (21), தினேஷ் (19), உறவினர் அய்யாதுரை (19) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல, அதிராம்பட்டினத்தில் முத்துக்குமாரின் மகன் கீர்த்திவாசன் (3), ஒரத்தநாடு அருகேயுள்ள சில்லத்தூரைச் சேர்ந்த கே. பெருமாள் (45), பேராவூரணி அருகே பெரியகட்சிக்கோட்டையைச் சேர்ந்த முருகனின் மகள் கலா (17), பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூர் பகுதி விண்ணைக்குடிதோட்டத்தைச் சேர்ந்த சின்னையாவின் மனைவி சாரதாம்பாள் (70),  தெக்கூர் ஏ. பழனிவேல் (59), வடசேரி தங்கவேல், கழனிவாசல் செல்லம்மாள் (60), ஒரத்தநாடு புதூர் அடைக்கலம் (80), பேய்க்கரம்பன்கோட்டை எம். மாரியப்பன் (47), கரூர் பிரான்சிஸ் (60), அம்மாபேட்டை உக்கடை வி. ஸ்ரீராம் (27) ஆகியோரும் சுவர், கூரை வீடு இடிந்து விழுந்ததில் பலத்தக் காயமடைந்து இறந்தனர்.
மேலும், அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரைத் தெருவைச் சேர்ந்த செல்வமணி மகன் முனீஸ்வரன் (12) புயல் காற்றில் பறந்து வந்த ஆஸ்பெஸ்டாஸ் தகடு விழுந்ததில் உயிரிழந்தார். இதேபோல, பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி வள்ளியம்மை (50) வீட்டு முன் இருந்த தென்னை மரம் விழுந்ததாலும், ஒட்டங்காடைச் சேர்ந்த இளங்கோவனின் மகன் கருப்பையன் (22) வீட்டு முன் இருந்த தேக்கு மரம் விழுந்ததாலும் இறந்தனர். தவிர, ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
 செல்லிடப் பேசி கோபுரங்கள் சாய்ந்தன: பட்டுக்கோட்டையில் பெரியகடைத் தெரு, சின்னையா தெரு, தஞ்சாவூர் காவேரி நகர் ஆகிய இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் சாய்ந்தன. பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள பள்ளிவாசலில் மினார் என்கிற கோபுரம் சேதமடைந்து விழுந்தது.


மின் தடை 
 மாவட்டத்தில் 5,000-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. பட்டுக்கோட்டையில் பாளையம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் தென்னை மரம் விழுந்ததில் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், இந்நிலையத்தில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, புயல் வீசத் தொடங்கியபோது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மின் கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. 

படகுகள் சேதம்
மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் ஏறத்தாழ 1,500 நாட்டுப் படகுகள் உள்ளன. இதேபோல, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினத்தில் 250-க்கும் அதிகமான விசைப் படகுகள் இயக்கப்படுகின்றன. புயல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாட்டுப் படகுகளும், விசைப்படகுகளும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன. மேலும், பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கின. எஞ்சிய படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

மரங்கள் சாய்ந்தன
மாவட்டத்தில் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும், வீடுகளிலும் உள்ள பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. இதில், அதிக அளவில் தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், வேப்ப மரங்கள், வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பகலில் சாலையின் குறுக்கே கிடந்த மரங்களைத் தொழிலாளர்கள் அறுத்து அகற்றினர். பின்னர், கும்பகோணம், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கின. ஆனால், மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், தஞ்சாவூரில் உள்ள புதிய, பழைய பேருந்து நிலையங்களில் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com