"கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ரேஷன் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடையும்'

நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணிவரன் முறை செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்குத் தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினோம். 
இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசு அழைத்து பேசாமல்,  துறை அலுவலர்களைப் பேச வைத்தது வருத்தம் அளிக்கிறது. துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையின்போது ஒத்துக்கொண்ட அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டபடி ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும். 
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருள்களைப் பொட்டலங்களாக வழங்க வேண்டும். கடைப் பணியாளர்கள் முன் பொருட்களை எடையிட்டு வழங்க வேண்டும். இதை முழுவதும் கணினிமயமாக்க வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com