பாபநாசம் அருகே காவிரியில் மூழ்கி 4 மாணவர்கள் சாவு: இருவரை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே காவிரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த 7 மாணவர்களில் 4 பேர் தண்ணீரில்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே காவிரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த 7 மாணவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்; 2 பேர் மாயமாகினர். மற்றொரு மாணவர்  தப்பினார்.
பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் சீத்தாலெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(17). இவர் தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் டி.எம்.இ. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சாமிநாதன் மகன்  கதிரவன் (17). இவர் கும்பகோணத்திலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.  பாலகிருஷ்ணன்  மகன் சிவபாலன் (15). கருப்பையன்  மகன் ஸ்ரீ நவீன் (14). இவர்கள் கபிஸ்தலத்திலுள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் முறையே 10,  9ஆம் வகுப்பு படித்து வந்தனர்.  குமார் என்பவரின் மகன் விஷ்ணுபிரியன் (13).  இவர் கபிஸ்தலம் அருகே ஆடுதுறை பெருமாள்கோவில் கிராமத்திலுள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 9ஆவது படித்து வந்தார். 
 தியாகராஜன் மகன் வெங்கடேசன் (18). இவர் பாபநாசம் அருகே நெடுந்தெரு கிராமத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் டி.எம்.இ. படித்து வந்தார். பாஸ்கர் மகன் சஞ்சய் (14).  கபிஸ்தலம் கோவிந்தசாமி மூப்பனார் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
விஜயதசமியையொட்டி விடுமுறை விடப்பட்டதால்,  இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகேயுள்ள முனியாண்டவர் கோயில் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 7 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இவர்களில் நீந்தி கரை சேர்ந்த சஞ்சய் கூச்சலிட்டதால் அங்கு வந்தவர்கள்  அளித்த தகவலின்பேரில்,  கபிஸ்தலம் போலீஸார் மற்றும் பாபநாசம் தீயணைப்பு மீட்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
நீண்டநேர தேடலுக்கு பிறகு மணிகண்டன், விஷ்ணுபிரியன், வெங்கடேசன், ஸ்ரீநவீன் ஆகிய 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். 
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான மற்ற இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com