வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

ஏழு தமிழர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வலியுறுத்தல்

DIN | Published: 11th September 2018 09:21 AM

ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டுக்குரிய செயல்.
தமிழ்நாடு ஆளுநர்,  சட்ட வல்லுநர் கருத்துகளைக் கேட்பது ஒருபக்கம் இருந்தாலும், காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராஷ்டிர காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-ன்படி, சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்குத் தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியாகப் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய நிலை இல்லை. ஆளுநர் மத்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது. கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும்,  ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் கணக்கில் எடுத்தும், ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் ஆளுநர் காலதாமதமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும்.
 

More from the section

கஜா புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: ஆட்சியர்
கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் தூய்மைப்பணி
தமிழ்ப் பல்கலை.யில் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கத் திட்டம்: துணைவேந்தர் பேச்சு
பாபநாசம் அருகே  டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது மிளகாய்பொடி தூவி ரூ.3 லட்சம் பறிப்பு