வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

தஞ்சாவூரில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 09:21 AM

தமிழக அரசுப் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் தொடர்பான அரசாணையை வெளியிட வலியுறுத்தி தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காலியாக உள்ள 350-க்கும் அதிகமான மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தகக் கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருந்துக் கிடங்குகளில் மருந்துக் கிடங்கு அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். கூடுதலாக மூன்று கட்டப் பதவி உயர்வு பணியிடங்களான மருந்தகக் கண்காணிப்பாளர்,  மருந்தியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 42 துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ. ரெங்கசாமி, மோட்டார் வாகனப் பணிமனை மற்றும் பராமரிப்பு ஊழியர் சங்க மாநிலச் செயலர் எஸ். கோதண்டபாணி,  கோவிந்தராஜ்,  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தி. ரவிச்சந்திரன், வட்டச் செயலர் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

More from the section


சரபோஜி கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு

ராஜகிரியில் மீலாது விழா பேரணி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியன் ஆயில் நிவாரணம்
சாலையில் கிடக்கும் மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் பயிர் இழப்பீடு தேவை: விவசாய சங்கம்