சனிக்கிழமை 17 நவம்பர் 2018

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காய்ந்த நாற்றங்காலுடன் வந்த விவசாயிகள்

DIN | Published: 12th September 2018 08:22 AM

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குக் காய்ந்த சம்பா நாற்றங்காலுடன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வந்தனர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு இயந்திர நடவில் பயன்படுத்தக்கூடிய பாய் நாற்றங்கால் காய்ந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கீழத்திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த விவசாயி டி. நடராஜன் தெரிவித்தது:
பருவ மழை மூலம் கிடைத்த நீரைப் பயன்படுத்தி சம்பா சாகுபடிக்காக இயந்திர நடவு செய்ய நீண்ட கால ரகமான சி.ஆர். 1009 விதைகளை விட்டு நாற்று வளர்த்தேன். வாய்க்காலில் வந்த தண்ணீரை டீசல் என்ஜின் மூலம் இறைத்து உழவு செய்யப்பட்டது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் வராததால் நாற்றங்கால்கள் முழுவதும் காய்ந்துவிட்டன. எனவே, தொடர்ந்து சாகுபடி செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்றார் அவர்.
அலுவலகத்துக்கு நண்பகல் 12 மணி வரை கோட்டாட்சியர் வராததால் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வாய்க்கால்களில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும், பொதுப் பணித் துறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஒரு டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் 7,000 ஏக்கரில் சாகுபடி செய்யலாம் எனக் கூறுவர். ஆனால், நூறு டி.எம்.சி. தண்ணீரை கடலில் கலக்கவிட்டது அரசு. இதனால், கடைமடைப்பகுதி மட்டுமல்லாமல், தலைப்புப் பகுதிக்கும், இடைப்பட்ட பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை. முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட மதகுகளை அடைப்பதாக் கூறி இங்கு தண்ணீர் விடவில்லை. மேட்டூர் அணை நிரம்பி வழிந்தும் வயல்களுக்குத் தண்ணீர் வரவில்லை. எனவே, காய்ந்த நாற்றங்கால்களுடன் வந்தோம். ஆனால், கோட்டாட்சியர் வராததால் வெளிநடப்பு செய்தோம் என்றார் ஜீவகுமார்.
இதில், விவசாய சங்க நிர்வாகிகள் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன், அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்,  ஆம்பலாபட்டு ஏ. தங்கவேல்,  பாச்சூர் த. புண்ணியமூர்த்தி,  மணத்திடல் சிவகுமார், அய்யாரப்பன்,  கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாதன்கோவிலில் மகா அஷ்டமி பெருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் நடைபயிற்சியாளர்களுக்கு
அடையாள அட்டை

மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசாணை நகலை எரித்த அரசு ஊழியர்கள் 21 பேர் கைது