கலாசார திருவிழா தொடக்கம்: தூய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரில் கலாசார திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் செப்.15ஆம் தேதி முதல் அக்.


தஞ்சாவூரில் கலாசார திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் செப்.15ஆம் தேதி முதல் அக்.2ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம், செப்.16 முதல் 27ஆம் தேதி வரை அனைவருக்கும் சுற்றுலா என்ற கலாசார திருவிழா நடைபெறுகின்றன.
அதன்படி, தஞ்சாவூர் பெரியகோயிலில் மத்திய அரசின் இந்திய சுற்றுலா, தமிழக அரசு சுற்றுலாத் துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், இன்டாக் அமைப்பு ஆகியவை சார்பில் கலாசார திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக, பெரியகோயிலில் சனிக்கிழமை காலை கல்லூரி மாணவ, மாணவிகள் 250க்கும் அதிகமானோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெரியகோயிலில் இருந்து தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் அரண்மனை வளாகத்தைச் சென்றடைந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய சுற்றுலா உதவி இயக்குனர் எம். தனியரசு, மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) கே. இளங்கோவன், தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சங்கர், பெரியகோயில் செயல் அலுவலர் மாதவன், இன்டாக் கெளரவச் செயலர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் பெரியகோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து ராஜகோபால பீரங்கி வரை தொல்லியல் அறிஞர் செல்வராஜ் தலைமையில் பாரம்பரிய நடை பயணம் நடைபெறுகிறது. இதன்பின், கீழ ராஜ வீதி, அரண்மனையில் கலாசார திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஓவியம், கைவினைப் பொருள்கள் கண்காட்சி, பிற்பகல் 3 மணி முதல் பராம்பரிய உணவு மற்றும் விளையாட்டு அரங்குகள், சுய உதவிக் குழுக்கள் முலம் தயாரிக்கப்படும் பொருள்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
இதனிடையே, பிற்பகல் 2 மணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வண்ணக் கோலப் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டியும், மாலையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com