கொள்ளிடத்தில் தடுப்பணைகள் அமைக்க காவிரி உரிமை மீட்புக்குழு கோரிக்கை

கொள்ளிடத்தில் மேலணையிலிருந்து கீழணை வரை தடுப்பணைகள் அமைக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.


கொள்ளிடத்தில் மேலணையிலிருந்து கீழணை வரை தடுப்பணைகள் அமைக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் காவிரிப் படுகையில் நீர் மேலாண்மை மறு சீரமைப்புத் தொடர்பாக கல்லணையிலிருந்து 5 குழுக்கள் செப்.17ஆம் தேதி புறப்பட்டன. குடந்தை அரசன் தலைமையிலான குழுவினர் திருவையாறு விளாங்குடியிலிருந்து வீராணம் ஏரி வரை கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் குடந்தை அரசன் சனிக்கிழமை கூறியது: கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து நீர்ப் பாசனக் குறைகள் குறித்து கேட்டறிந்தோம்.
அப்போது, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் நகர் மட்டுமல்லாது புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சில பகுதிகள் வரை இத்திட்டத்தின் மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உள்ள கிராமங்களில் 15 முதல் 30 அடி வரை ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் 70
முதல் 100 அடிக்கு சென்றுவிட்டது. அதேபோல, இடதுகரையில் உள்ள கிராமங்களில் 50 முதல் 70 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 200 அடிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால், மோட்டார் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சவாலாக இருக்கிறது. எனவே, மேலணையிலிருந்து (முக்கொம்பு) கீழணை (அணைக்கரை) வரை தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். விளாங்குடி பாலத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி 50 மீட்டருக்குள் அள்ளியதால், பெரும்பள்ளம் ஏற்பட்டு, நீரோட்டம் தடைபட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் மணல் எடுப்பதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com