தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் தீவிபத்து

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நான்கு சந்திப்பு சாலைக்கு மிக அருகிலுள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 ஆவது தளத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்ட் பேட்ரிக், ரான்குட் வில்லி, ஜாஷே ரான்குட் ஆகிய மூவர் தங்கியிருந்த அறை எண் 303 இல் உள்ள ஏசி-யிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. தொடர்ந்து தீப்பொறியும் வந்தது.
இதுகுறித்து அவர்கள்,  விடுதி நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துவிட்டு, அறையை விட்டு வெளியேறியுள்ளனர். விடுதி பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென படுக்கைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றில் பரவியது.
தகவலின் பேரில் அங்கு வந்த தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மா. இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கத் தொடங்கினர். படுக்கைகள் மற்றும் திரைச்சீலைகளில் ஏற்பட்ட தீயினால் வந்த கரும்புகையால் தீயணைப்பு வீரர்களாலும் உடனடியாக குறிப்பிட்ட அறைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அருகிலிருந்த மற்றொரு அறைக்கும் தீ பரவியது. மேலும், அறைகளிலிருந்து வெளிவந்த கரும்புகையினால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. 
இதன் காரணமாக தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சொகுசு விடுதியின் அறைகளில் தங்கியிருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளர்களை விடுதி நிர்வாகம் வெளியேற்றியது. 
தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. விடுதியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com