தஞ்சாவூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மக்களவைப் பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

மக்களவைப் பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7,03,967 ஆண்களும், 7,39,314 பெண்களும், 97 திருநங்கைகளும் என மொத்தம் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 1,691 வாக்குச்சாவடிகள் உள்ளன. 
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,40,794 வாக்காளர்களும், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,54,934 வாக்காளர்களும், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,44,054 வாக்காளர்களும் உள்ளனர். இவற்றில் திருவிடைமருதூர் தொகுதியில் 291 வாக்குச் சாவடிகளும், கும்பகோணம் தொகுதியில் 287 வாக்குச் சாவடிகளும், பாபநாசம் தொகுதியில் 300 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
மாவட்டத்தில் 5,722 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3,622 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,005 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. இவை இரண்டு கட்டங்களாகக் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில்,  கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை வேன்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இவற்றுடன் தடுப்புகள், மை, அரக்கு, பேனா, பென்சில், அளவுகோல், நூல் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், தேர்தல் பணியாளர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
11,662 பணியாளர்கள்: மாவட்டத்தில் 11,662 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரு கட்டங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டன. மேலும், உள்ளூர் காவலர்கள், துணை ராணுவத்தினர் என மொத்தம் ஏறத்தாழ 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், திருவிடைமருதூர் தொகுதியில் 13 வாக்குச் சாவடிகளும், கும்பகோணம் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும், பாபநாசம் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளும், திருவையாறில் 10 வாக்குச் சாவடிகளும், தஞ்சாவூரில் 15 வாக்குச் சாவடிகளும், ஒரத்தநாட்டில் 17 வாக்குச் சாவடிகளும், பட்டுக்கோட்டையில் 13 வாக்குச் சாவடிகளும், பேராவூரணியில் 11 வாக்குச் சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மூன்று அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் உள்ளூர் போலீஸாரும், மூன்றாம் அடுக்கில் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
11,995 மாற்றுத் திறனாளிகள்:மாவட்டத்தில் 11,995 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் இரு வாக்குகள்
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. எனவே, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் இரு வாக்குகளைச் செலுத்த வேண்டும். இதற்காக வாக்குச் சாவடிகளில் மக்களவைக்கு ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், சட்டப்பேரவைக்கு ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் இரு இயந்திரங்களும் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com