திருக்கோடிக்காவல் கோயிலில் தீர்த்தவாரி

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.


கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் சித்திரைப் பெருந்திருவிழாவில் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.
திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வார்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு. 
மேலும், எடைக்கு எடை பக்தர்கள் காணிக்கை வழங்கும் துலாபாரம் இக்கோயிலில் இருப்பது விசேஷமானது. இக்கோயில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியர் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினார்.
இக்கோயிலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்த சித்திரைப் பெருந்திருவிழாவை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா ஏப்.10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடும், ஏப். 14ம் தேதி இரவு ஓலைச்சப்பர புறப்பாடும், 16ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 18ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து,  வெள்ளிக்கிழமை பிற்பகல் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதில், காலை 7 மணியளவில் ஸ்ரீ நடராஜர் எழுந்தருளியதைத் தொடர்ந்து, யாகசாலை பூர்ணாஹூதி, காலை 10 மணியளவில் ரிஷப வாகனத்தில் காட்சியருளல், பிற்பகல் 1 மணியளவில் சிருங்கோத்பவ புஷ்கரணியில் சித்திரைத் தீர்த்தவாரி ஆகியவையும், மாலை 6 மணிக்கு ஏகாஸனக் காட்சி, கொடியிறக்கமும் நடைபெற்றன. 
மேலும், சனிக்கிழமை விடையாற்றி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை சண்டிகேசர் உற்சவம், ஆசார்ய உற்சவம், திங்கள்கிழமை சுத்தாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com