ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு அனுமதிக்கு கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) தெரிவித்துள்ளது.


ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் தெரிவித்திருப்பது:
காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கான முயற்சியை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொண்டது. தமிழ்நாடு அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. 
மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாய சங்கங்கள் விவசாயிகளைத் திரட்டி பல வகையான போராட்டங்கள் நடத்தின. அதன் காரணமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்தது. தற்போது அதற்கு மாறாக அத்திட்டங்களை அமல்படுத்த மோடி அரசு முடிவு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும் மெளனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
முதல் கட்டமாக கடலூர் மாவட்டம், தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ., மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ., பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம், புஷ்பவனம் வரை 2,674 சதுர கி.மீ., திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம், கரியாபட்டினம் வரை 431 சதுர கி.மீ. பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
ஹைட்ரோ கார்பன் என்ற ஒற்றை உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் நிலத்தடியில் ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கும், அகலத்துக்கும் துளையிட்டு ஹைட்ராலிக் பொருட்கள் நிரம்பிய தண்ணீரை செலுத்தி பாறைகளை உடைத்து, அதன் கீழ் உள்ள மீத்தேன், பாறை எரிவாயு போன்ற எரிவாயுக்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளன.
இதனால், காவிரி டெல்டாவில் உள்ள பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். பாலைவனமாக மாறிவிடும். தானிய உற்பத்தி தடைபடும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். சுற்றுச்சூழல் மாசடைந்து மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும். மீன் வளம் தடைபடும். இயற்கை இடர்பாடுகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்ணையும், மக்களையும், கடல் பகுதியையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com