ஹைட்ரோ கார்பன் திட்டம்: கூட்டுப் போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பு) மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பு) மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ரசாயன மண்டலமாக அறிவித்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள்  ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் கொண்டு வர மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என அறிவித்தனர். ஆனால் அதற்கு மாறாக சுற்றுச்சூழல் அறிக்கையை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தாக்கல் செய்யலாம் என இரு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயல்.
எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. மீறினால் அதை எதிர்த்து ஒத்தக் கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தப்படும். 
எண்ணெய் கிணறுகள் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நேரடியாகக் களத்தில் இறங்கி தடுப்போம். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விவசாயிகளுக்குத் தமிழக அரசுத் தெளிவுபடுத்த வேண்டும். 
விவசாயிகளின் விருப்பத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டால், அதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஏப். 28-ம் தேதி திருவண்ணாமலையில் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இதில், மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறையைப் பொருத்து எங்களுடைய செயல்பாடுகளை எப்படி அமைத்துக் கொள்வது என தீர்மானிக்க இருக்கிறோம். 
மக்காசோளத்தில் அமெரிக்க படை புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 7,410, நன்செய் பயிர்களுக்கு ரூ. 13, 500 இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும் என்றார் சண்முகம். 
இக்கூட்டத்துக்குச் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் டி. ரவீந்திரன், கே. முகமதுஅலி, பொருளாளர் கே.பி. பெருமாள், செயலர்கள் டெல்லி பாபு, சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com