தண்டந்தோட்டம் கோயிலில் 7 பழங்காலச் சிலைகள் திருட்டு: 47 ஆண்டுகளுக்குப்பிறகு வழக்குப் பதிவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டம் நடனபுரீசுவரர் கோயிலில் 47

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டம் நடனபுரீசுவரர் கோயிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு 7 பழங்காலச் சிலைகள் திருட்டு போனது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
இக்கோயிலில் 1971, மே 12-ம் தேதி கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு ஒரு மற்றும் ஒன்றரை அடி உயரமுள்ள இரு கிருஷ்ண காளிங்க நர்த்தன சிலைகள், இரண்டரை அடி உயரமுள்ள அகஸ்தியர் சிலை, தலா அரை அடி உயரமுடைய அய்யனார், அம்மன் சிலைகள் ஆகியவை திருட்டு போனது.
இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதற்கான நடவடிக்கையை சிறப்பு அலுவலர் பொன் மாணிக்கவேல் மேற்கொண்டார். இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்திருப்பது:
இச்சிலைகள் திருட்டு போனது தொடர்பாக தொடர்ந்து 47 ஆண்டுகளாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த திருட்டு  அக்காலத்தில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கும், காவல் துறைக்கும் முழுவதும் தெரிந்துள்ளது.  
ஐம்பொன்னால் செய்யப்பட்ட இச்சிலைகள் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான முற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவை. இதன் மதிப்பு ரூ. 60 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.  இதற்கு அடுத்த ஆண்டிலேயே (1972) இதே கோயிலில் ரூ. 50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நடனபுரீசுவரர் நடராஜர் ஐம்பொன் சிலை, கொலு அம்மன் ஐம்பொன் சிலை பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டன. 
இதுவரை திருடப்பட்ட 7 சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சிலைகளில் குறிப்பாக நடராஜர் சிலை லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்துள்ளதும், அதன் பிறகு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. திருட்டு போன சிலைகளைத் தவிர்த்து மீதமுள்ள 17 தெய்வச் சிலைகள் தற்போது ஒப்பிலியப்பன் கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. 
புகார்தாரரான வாசு அய்யர்,  இந்த 17 சிலைகளில் பல தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக போலியான சிலைகள் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் வைக்கப்பட்டு கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தனியாகப் புகார் கொடுத்துள்ளார்.
இச்சிலைகளின் உண்மையான தொன்மைத் தன்மைகளைக் கண்டறிய, இந்த 17 சிலைகளையும் தொல்லியல் துறையின் தொன்மை நிபுணர் குழு சோதனை செய்து உண்மை நிலையை கண்டறிந்து தண்டன்தோட்ட கிராம மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com