மருத்துவக் கல்லூரியில் விரைவில் வலி நிவாரண மையம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது


தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் அக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ்.
இக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கடுமையான வலி நிவாரணம் தொடர்பான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அவர் பேசியது:
நோயாளிக்கு வலி நிவாரணம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக பல்வேறு வகையான வலிகள் உள்ளன. 
இதில், கடுமையான வலி, நாள்பட்ட வலி முக்கியமாகக் கருதப்படுகிறது. கடுமையான வலி என்பது உடனடியாக வரக்கூடியது. பல் வலி, அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் ஏற்படும் வலி உள்ளிட்டவற்றை கடுமையான வலியாகக் கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்படுவது போன்றவற்றை நாள்பட்ட வலி எனக் கூறுகிறோம்.
வலி நிவாரண மேலாண்மையில் மயக்கவியல் நிபுணர்கள் முன்னிலையில் உள்ளனர். முன்பு போல மயக்க மருந்து மட்டும் கொடுக்காமல், வலிக்குரிய தீவிர சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றில் மயக்கவியல் நிபுணர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
முந்தைய காலத்தில் வலி என்றால் வாய் வழியாக மாத்திரை அல்லது நரம்பில் ஊசி போடப்படும். இப்போது, ஒரு நோயாளிக்கு வாய் வழியாக மாத்திரை கொடுக்கவும், ஊசி போடவும் முடிகிறது. அல்லது சிறிய சிறிய பேண்டேஜ்களை ஒட்டலாம். காலில் வலி என்றால் காலுக்குச் செல்லும் நரம்பை ஸ்கேன் மூலம் கண்டறிந்து மருந்து கொடுக்க முடியும். முதுகு வலி என்றால், முதுகில் ஊசி போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். 
மது பழக்கத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு தீர்வு ஏற்படுத்த முடியும். இந்த அளவுக்கு வலி நிவாரண மேலாண்மையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
எனவே, இம்மருத்துவமனையிலும் வலி நிவாரண மையம் தொடங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மையம் விரைவில் தொடங்கப்படும் என்றார் முதல்வர். 
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ரவிக்குமார், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஏ. பாரதி, அரசு ராசா மருத்துவமனைத் துணைக் கண்காணிப்பாளர் குமரன், நிலைய மருத்துவ அலுவலர்கள் எஸ். சண்முகம், உஷாதேவி, மயக்கவியல் துறைத் தலைவர் சாந்தி பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com