காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நம்பும்படியாக இல்லை: செ. நல்லசாமி பேட்டி

தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர்

தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என்றார் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ. நல்லசாமி.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே முக்கால் ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை இந்த அரசு என்ன செய்தது. 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்திட்டத்தை அமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே, அவர் அறிவித்துள்ள இத்திட்டம் நம்பும்படியாக இல்லை. 
ஏற்கெனவே, பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிறைவேற்றினால் கூட தமிழ்நாட்டுக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.  சென்னையில் புதன்கிழமை உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கப்படவுள்ளது. இதில், வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிலகங்கள்தான் முதலீடு செய்ய முன் வருகின்றன. 
குறிப்பாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்குத்தான் முதலீடு செய்யவுள்ளன. 
இந்த முதலீடுகளால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாழாக்கக்கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கள் இறக்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். கள் இறக்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. உடலுக்கும் நல்லது. 
எனவே, கள் மீதான தடையை நீக்கி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்ற போராட்டத்தைப் போல இளைஞர்கள், சமூக ஆர்வலர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார் நல்லசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com