தஞ்சை - திருச்சி  ரயில் மின்பாதையில் சோதனை ஓட்டம்

தஞ்சாவூர்-திருச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் மின்பாதையில் சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.  ரயில்வே  பாதுகாப்பு


தஞ்சாவூர்-திருச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் மின்பாதையில் சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது.  ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் இதனை ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் - திருச்சி ரயில் பாதை மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது, புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் மீட்டர் கேஜ் பாதையும் அகற்றப்பட்டு, அந்த இடமும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டதை அடுத்து இரட்டை வழிப் பாதையாக உள்ளது.
இந்நிலையில் டீசல் பயன்பாட்டை குறைக்கவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் ஏதுவாக திருச்சி - காரைக்கால் இடையே 153 கி.மீ. தொலைவுக்கு  ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.250 கோடி ஒதுக்கியது.
இதில் முதற்கட்டமாக, திருச்சி - தஞ்சாவூர் இடையே 50 கி.மீ. தொலைவுக்குப் பணிகள் நிறைவு பெற்றன.  2 ஆவது கட்டமாக, தஞ்சாவூர் - காரைக்கால் இடையே பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்காக தஞ்சாவூரில் 25 கே.வி துணை மின் நிலையம் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி - தஞ்சாவூர் இடையே இரட்டை வழி அகல ரயில் பாதையில் சனிகிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறவிருந்ததால், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் யாரும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முதலிரண்டு நடைமேடைகளுக்கிடையே உள்ள தண்டவாளங்கள் மின்பாதையாக மாற்றியதை அடுத்து, சனிக்கிழமை பிற்பகல்  3 மணிக்கு எட்டுப் பெட்டிகளை கொண்ட மின்சாரத்தில் இயங்ககூடிய ரயில் பெட்டிகளும், இன்ஜினும் நிறுத்தப்பட்டது.
அதற்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் மாலை 3.35 மணிக்கு தஞ்சாவூரில் முதலாவது நடைமேடையிலிருந்து திருச்சிக்கு சோதனை ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்
பி.உதயகுமார்ரெட்டி, முதன்மை மேலாளர் (இயக்கம்) பிரசன்னா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் ரயில் நிலைய மேலாளர் பி.பி.ராஜசேகரன் கூறியதாவது: திருச்சி - தஞ்சாவூர் இடையே 50 கி.மீ.தொலைவுக்கு இரு வழிப்பாதையிலும் மின்மயமாக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக பயணிகள் ரயில் 55 நிமிஷங்களிலும், விரைவு ரயில்கள் 45 நிமிஷங்களிலும் திருச்சி- தஞ்சாவூர் இடையே செல்கிறது. மின்சாரத்தில் இயங்கும் போது, வேகம் அதிகரிக்கப்பட்டு 35நிமிடங்களில்  தஞ்சாவூர் - திருச்சிக்கு செல்ல முடியும்.
சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் 20 தினங்கள் கழித்து இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதற்கு ஏற்றார்போல் துணை மின் நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
எர்ணாகுளம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் தஞ்சாவூர் வரை மின்சாரத்தில் இயக்கப்படும். பின்னர் இங்கிருந்து டீசல் இன்ஜின் பொருத்தி அவை செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும்.
ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதை பணியில்  சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com