மாவட்டத்தில் பெரும் பாதிப்பு: மரங்கள், வாழைகள் சாய்ந்தன

கஜா புயலால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கஜா புயலால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகளவில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
கஜா புயல்  வியாழக்கிழமை நாகையை கடக்கத் தொடங்கியதும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் காற்று வீசத் தொடங்கியது. அப்போது லேசாக மழை பெய்து வந்தது.  நாகையில் புயல் கரையைக் கடந்த பின்னர், இந்த காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி, மழையும் தீவிரமாக பெய்தது.
வேகமாக வீசிய காற்றின் காரணமாக சுப்பிரமணியபுரம்,  மன்னார்புரம் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம், திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகம், பழையச் சுற்றுலா மாளிகை, டிவிஎஸ் டோல்கேட், கருமண்டபம், பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம், நீதிமன்றம்,  பாரதியார் சாலை நல்லி சில்க்ஸ் அருகே போன்ற பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதுபோல, மாநகராட்சி நுழைவுவாயில் அருகில் இருந்த புங்கை மரம் திடீரென சாய்ந்து காவலர் அறை மீது விழுந்தது.  இதில் காவல் பணியில் இருந்த சாமி என்பவர் உயிர்த் தப்பினார். 
மின்மாற்றி வெடித்தது: மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வேலன் மருத்துவமனை  எதிரில் சாலையின் மையத் தடுப்பில் இருந்த மின் கம்பங்கள்,  பழையச் சுற்றுலா மாளிகை வளாகத்தில் இருந்த மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.   பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக மணப்பாறை வட்டம், வேங்கைக்குறிச்சியில் 10 வீடுகள்  சேதமடைந்துள்ளன.  திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் முன்பிருந்த மின் மாற்றி வெள்ளிக்கிழமைஅதிகாலை வெடித்தது. இதனால் மின் வயர்கள் சாலையில் விழுந்தன. அந்த நேரத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 
    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில்  உள்ள மரங்களும் சாய்ந்து விழுந்தன. 
சாலைகளில் தேங்கிய மழைநீர் : திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பெய்த தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர்த் தேங்கிக் காணப்பட்டது. குறிப்பாக, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், தென்னூர், தில்லைநகர் போன்ற மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. பிற்பகல் 12 மணிக்கு மேல்தான் மழை நின்றது.
வாழைகள் சேதம் :  வெள்ளிக்கிழமை காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு,  அறுவடை செய்யும் நிலைக்குத் தயாராக இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக வயலூர், சீராத்தோப்பு, குழுமணி, ஏகிரிமங்கலம், ஜீயபுரம், அல்லூர், பேட்டைவாய்த்தலை,  கல்லணை அருகிலுள்ள பனையக்குறிச்சி, கிளிக்கூடு, உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10,000 ஏக்கர் மதிப்புள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழைகள் காற்றின் காரணமாக சாய்ந்து விழுந்தன. இதுபோல, லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர், முசிறி வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழைகள் பெருமளவில் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
முன்னெச்சரிக்கை இல்லை :  மற்ற பகுதிகளில் கஜா  புயல் காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதே முன்னரே தெரிவித்திருந்தால், நாங்கள் பயிரிட்டிருந்த வாழைகளைக் காக்கும் வகையில் சவுக்குக் கட்டைகளை வைத்து பாதுகாத்திருப்போம். ஆனால் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாத நிலையில், வாழைகள் கடுமையான அளவில் சேதம் அடைந்துள்ளன.
எனவே சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வரை நிவாரணம் வழங்கிட வேண்டும்  என்றார் தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன்.
மின் இணைப்புத் துண்டிப்பு :  புயல் காரணமாக  மழை பெய்தாலும், காற்றும் அதிகமாக வீசியதால் புறநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை  இரவே மின் விநியோகம் ரத்தானது. மாநகரில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் ரத்தான மின் விநியோகம் பிற்பகலுக்குப் பிறகே சரியானது.
காற்றின் காரணமாக மாநகர், புறநகர்ப் பகுதிகளில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், தார்பாய்கள் என கடைகள் மீது போடப்பட்டிருந்தவை காற்றில் பறந்தன. இதன் காரணமாக திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சிறிய கடைகள் மூடப்பட்டிருந்தன. அதிகாலை முதல் மின் விநியோகம் ரத்தானதால் சமையல் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் சிறிய நிலையில் உள்ள உணவகங்கள் பல மூடப்பட்டன.

லால்குடி, மண்ணச்சநல்லூரில்...
திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கஜா புயலால் பயிரிடப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 10 லட்சத்துக்கும் அதிகமான வாழை மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை முறிந்து  சேதமடைந்தது. 
லால்குடி பகுதியில்  சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த 10 லட்சத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. 
இந்த சேதங்களை ஈடுசெய்யும் வகையில் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு: அதேபோல, பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் இணைப்பு 2 மணிக்குப் பிறகு சீரானது. இதனால் இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பிற்பகல் வரை பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு: லால்குடி அருகே தாளக்குடி முருகன் கோயில் பகுதியில் இருந்த பழமையான நாவல் மரம் முறிந்து விழுந்ததால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. 
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் மற்றும் கொள்ளிடம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சாலையில் குறுக்கே கிடந்த மரத்தை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com