கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு திருச்சி நகரம் மட்டுமல்லது மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன்

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு திருச்சி நகரம் மட்டுமல்லது மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன், விநாயகர், முருகன் கோயில்களில் ஐயப்ப பகத்ர்கள் சனிக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இதனையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். தமிழ் மாதங்களில் பிரசித்தி பெற்ற கார்த்திகை மாதத்தில் ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வதும் வழக்கம்.
நிகழாண்டு சனிக்கிழமை (நவ.17) கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலை சீசன் கார்த்திகை முதல் தேதியான நவ.17இல் தமிழகம் முழுவதும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில், கண்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலையே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காவிரியில் புனிதநீராடி ஈரத்துணியுடன் வந்து ஐயப்பனை வழிபட்டனர். பின்னர், குருசுவாமியின் திருக்கரங்களால் 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணி மாலையை அணிந்து விரதத்தை தொடக்கினர். குருசுவாமி இல்லாதவர்கள் அவரவர் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்தனர். இதனால் அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலை சீசனை முன்னிட்டு சந்தனமாலை, ருத்ராட்சமாலை, துளசிமாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகளின் விற்பனை திருச்சி கடைவீதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருப்பு, நீலம், காவி வேஷ்டிகளின் விற்பனையும் ஜவுளிகடைகளில் அதிகரித்துள்ளது. கார்த்திகை விரதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com