தமிழக அரசின் ஆய்வுக்குப் பின் மத்திய குழு வருகை குறித்து முடிவு

கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக அரசு ஆய்வு செய்த பிறகு மத்திய குழு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.


கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக அரசு ஆய்வு செய்த பிறகு மத்திய குழு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் அப்பழுக்கற்ற தேசபக்தியை பின்பற்றும் வகையில், அந்த மூலமந்திரத்தை எடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி தூத்துக்குடி, ராமேசுவரம் வழியாக சென்னை வரை சிறிய அளவிலான உள்நாட்டு படகுப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வகுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளை சில இடங்களுக்குச் சென்றேன். புயல் பாதித்த சில மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடம், உணவு, சுகாதாரம் என அனைத்து வசதிகளையும் அரசு உடனடியாக கவனித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சியாக செயல்பட்டு உள்ளனர். மத்திய அரசும் 70 கப்பல்களை அனுப்பி கடலில் இருந்த மீனவர்கள் கரை திரும்ப ஏற்பாடு செய்தது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முன்னேற்பாடு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
கஜா புயலால் பாதிப்பு அதிகம்; சரிசெய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது. புயல் பாதிப்பு குறித்து தமிழக அரசு ஆய்வு செய்த பிறகு மத்திய குழு வருகை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
முன்னதாக, ஓட்டப்பிடாரத்தில் வஉசி நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள சிலைக்கும் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com