புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

100 பவுன் வரதட்சிணை கேட்டு  திருமணத்தை நிறுத்திய இளைஞர் கைது

DIN | Published: 11th September 2018 09:16 AM

திருச்சியில் 100 பவுன் வரதட்சிணை கேட்டு, ஆசிரியையைத் திருமணம் செய்ய மறுத்த தனியார் நிறுவன அதிகாரியை மகளிர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கடையக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ராஜசேகர். தற்போது திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள்  தனியார் பள்ளி ஆசிரியை.  இருவருக்கும் திருச்சி மாவட்டம் துவாக்குடி ராவுத்தான்மேடு பகுதியைச் சேர்ந்த என்.ஐ.டி. ஊழியரான சரவணன் மகன் மகேந்திரனுக்கும் செப். 12 ஆம் தேதி காட்டூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
மகேந்திரன் திருச்சியில்  தனியார் ரசாயன நிறுவனத்தில் கொள்முதல் அதிகாரியாக உள்ளார். வரதட்சிணையாக 50 பவுன் நகைகள்,  ரூ. 5  லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் தர ராஜசேகர் தரப்பினர் சம்மதித்தனர்.  இந்நிலையில், ஆக. 22 ஆம் தேதி திருச்சியில் மணப்பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை எடுக்கச் சென்றதில், இரு தரப்பினருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. 
இதைத்தொடர்ந்து, திருமணத்துக்கு சில தினங்களே உள்ள நிலையில், 100 பவுன் நகைகள் திருமணத்துக்கு முன்பே தர வேண்டும் என மணமகன் வீட்டார் வற்புறுத்தியுள்ளனர். மணப்பெண் வீட்டார் சமாதானம் பேசியும் பலனில்லை. இதுதொடர்பாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜசேகர் செப். 7ஆம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து, மணமகன் வீட்டார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. 
தொடர்ந்து, மகளிர் வன்கொடுமை மற்றும் வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட 3  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மணமகன் மகேந்திரனைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரது பெற்றோர் சரவணன்-பாப்பாத்தி, தங்கை மகாலட்சுமி  உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

More from the section

திருச்சி அருகே பெரியார் சிலை சேதம்


கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகே குளிர்சாதன வசதியுடன் நிழற்குடை

மைய நூலகத்தில் இன்று மகளிருக்கான மருத்துவ முகாம்
மாநகராட்சி குறைகள் கூற  "ஸ்மார்ட் திருச்சி' செயலி
ரயில்வே ஊழியர்களுக்கு 100 நாள் ஊதியம் போனஸாக வழங்கக் கோரிக்கை