புதன்கிழமை 14 நவம்பர் 2018

திருச்சி என்.ஐ.டி.யில்  பெஸ்டம்பர் கலை விழா நாளை தொடக்கம்

DIN | Published: 12th September 2018 08:29 AM

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் பெஸ்டம்பர் எனும் கலைவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது என்றார் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியது:
1974 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெஸ்டம்பர் கலைவிழா நிகழாண்டில் 44 ஆவது ஆண்டாகக் கொண்டாடப்பட உள்ளது. செப். 13 ஆம் தேதி தொடங்கும் கலைவிழா 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  விழாவில், நடனம், இசை, இலக்கியம்,  ஆடை அலங்காரம், புகைப்படக் கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 65 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் போட்டிகள் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 500 பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 15,000 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். 
திரைப்பட இயக்குநர் பி.வாசு,  பாலே இசைக் கலைஞர்  கரண் அர்ஜூன் சிங், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் அஸ்வின் சங்கி,  நடிகை நித்யாமேனன், பாடகர் கார்த்திக் ஆகியோரது சிறப்பு  சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.  இதுதவிர, பிரித்தம், சச்சின் ஜிகர், அமித் திரிவேதி போன்ற இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும், பைன் ஆப்பிள் எக்ஸ்பிரஸ், ஸ்க்ராட்,  ஸ்விட்ச் செரூ என்னும் மேற்கத்திய இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகள்,  டி.ஜெ. சபரினா டெரன்ஸ்,  பிரபல பாலிவுட் பாடகி சுநிதி சவுகான் போன்றோர் பங்கேற்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. விழா நாட்களில் தினசரி இரவு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரும், காக்னிசன்ட் டெக்னாலாஜி சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்திரசேகரன் பெஸ்டம்பர் விழாவை (செப். 13) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தொடக்கி வைத்துப் பேசுகிறார் என்றார் அவர். 
பேட்டியின் போது, மாணவர் நல முதன்மையர் முனைவர் சாம்சன் மாத்யூ, இணை முதன்மையர் ஜெ.ஜெரோம், பெஸ்டம்பர் தலைவர் வருண் ஆகாஷ்,  பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

More from the section

முத்திரைக் கொல்லர் பணி: எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
மணப்பாறையில் நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
தீயணைப்பு அதிகாரியை கடித்த 12 அடி நீள மலைப்பாம்பு
ஜேசிபி வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
காவிரி ஆற்று தண்ணீரும், மணலும் தமிழ்த் தலைமுறைக்கு சொந்தம்