புதன்கிழமை 21 நவம்பர் 2018

ரௌடி புல்லட் நாகராஜன் வேலூர் சிறைக்கு மாற்றம்

DIN | Published: 12th September 2018 08:29 AM

ரௌடி புல்லட் நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு செவ்வாய்க்கிழமை மாற்றம் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன் (50) . இவர், சிறை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு ஆடியோ மூலம் மிரட்டல்  விடுத்தது தொடர்பாக  மதுரை சிறைத்துறை அதிகாரி ஊர்மிளா கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் மற்றும் கரிமேடு காவல் நிலையங்களில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை நாகராஜனை கைது செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்குப் பின்னர்  நாகராஜனுக்கு மூவர் அடைக்கப்படும் சிபி 1 ஆவது பிளாக்கில் உள்ள அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, அந்த அறையில் இருவர் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து,  காலை 11.30 மணியளவில் நாகராஜனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 
இது குறித்து சிறைத் துறையினர் கூறுகையில்,  கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ்சுக்லா உத்தரவின் பேரில், வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
ஏற்கெனவே, நெல்லையைச் சேர்ந்த ரௌடி கண்ணபிரான், மேலும் சிலர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வந்த சில மணி நேரங்களிலேயே  நாகராஜனை வேலூர் சிறைக்கு மாற்றியிருப்பது சிறைத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from the section

மணப்பாறையில் 8  இடங்களில் மக்கள் மறியல்: மின்வசதி, குடிநீரின்றி தவிப்பு
துறையூர் சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
திருச்சியில் மீண்டும் மழை
பள்ளி மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ரத்து: மண்டல துணை இயக்குநர் தகவல்

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் தண்ணீர் 
வழங்கக் கோரிக்கை