திருச்சி

உற்பத்தி அதிகரிப்பால் வெங்காயம் விலை வீழ்ச்சி

DIN

உற்பத்தி, வரத்து அதிகரிப்பால்  சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே நிலை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழையப் பால்பண்ணை அருகில் அனைத்து அழுகும் பொருள்களின் கமிஷன் மண்டி என்ற பெயரில் வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது.
இங்கு,  திருநெல்வேலி, பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து 9 மாதங்களுக்கும், கர்நாடகத்திலிருந்து 3 மாதங்களுக்கும் சிறியவெங்காயம் வரத்து இருக்கும். தினமும் 200 டன் முதல் 400 டன் வரை வரத்து இருக்கும். இதுபோல, கர்நாடக மாநிலம், பெல்லாரி, ஹூப்ளி, தாவணகெரே பகுதிகளிலிருந்து பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் 3 மாதங்களுக்கும், மகாராஷ்டிர மாநிலம், நாசிக் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொடர்ந்து 9 மாதங்களுக்கும் வெங்காய வரத்து இருக்கும்.
அதிக விளைச்சலும், வரத்தும் :  தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் பெரிய வெங்காயத்தின் விளைச்சல்  அதிகரித்து காணப்படுகிறது.  திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள பாவூர்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான அளவில் விளைச்சல் இருந்ததால், அங்கு விளைந்த வெங்காயம்  மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டு, அதன்பிறகு திருச்சி,  சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், கர்நாடக மாநிலத்தின் தும்கூர், ஹசன் போன்ற மாவட்டங்களிலிருந்தும் தினமும் 100 முதல் 200 டன் வரை பெரிய வெங்காயம்  திருச்சிக்கு வருகிறது. 
இமட்டுமல்லாது, மகாராஷ்டிரம் மாநிலம், நாசிக் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் 200 டன் பெரிய வெங்காயம் வரத்து இருக்கிறது. இதனால் வெங்காயத்தின் விலை குறைந்தே காணப்படுகிறது.   விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. 
கடந்தாண்டைக் காட்டிலும் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள், தமிழகத்திலும் பெரிய வெங்காயத்தின் வரத்து சீராக இருப்பதால் கிலோ  ரூ.8 முதல் ரூ.15 வரை மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய வெங்காயம்:  சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 200 முதல் 220 டன் வரை வரத்து இருக்கிறது. இதனால் இந்த வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.12 முதல் ரூ.23 வரை மொத்த விற்பனை செய்யப்படு வருகிறது.
இதிலிருந்து சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.2 முதல் 5 வரை உயர்த்தி விற்பனையாகலாம்.


விலை சரிவுக்கு காரணம் என்ன ? 
பொதுவாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள்தான் நம் மாநிலத்தின் வெங்காயத் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்கின்றன. சிறிய வெங்காயம் தமிழகத்தின் பயிரிடப்பட்டிருந்தாலும், பெரிய வெங்காயம்  வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டிலும் ஏதாவது ஒருவகையில் வெங்காயம் விளைச்சலில் பாதிப்பு நிகழ்ந்து வந்தன. ஆனால் நிகழாண்டில் பெரிய வெங்காயத்தின் விளைச்சலில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் சீரான வகையில் உற்பத்தி இருந்ததால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் விளைச்சலும், வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வெங்காயத்தின் இந்த விலை சரிவு இன்னும் ஒரு மாதக் காலத்துக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் விலையில் சற்று உயர்வு ஏற்படும். ஆனாலும் அதுபெரிய அளவில் இருக்கிறது. டிசம்பர் மாதத்துக்குப் பிறகுதான் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் உயர்வு காணப்படும் என்கிறார்  திருச்சி அனைத்து அழுகும் பொருள்களின் கமிஷன் மண்டி வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலர் ஏ. தங்கராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT