கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

திருச்சி-கோ  ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி-கோ  ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டின் விற்பனை இலக்காக ரூ.3.68 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள கோ- ஆப்டெக்ஸில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விற்பனையைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
கோ- ஆப்டெக்ஸில் புதிய ரக ஆடைகள் ரூ.3000 முதல் ரூ.55,000 வரையிலான விலைகளில் விற்கப்படுகின்றன. விதவிதமான வடிவமைப்பு புடவைகள் உள்ளன. மத்தியப் பேருந்து நிலையம் மட்டுமல்லாது, மெயின்கார்டுகேட் மற்றும் பாரதமிகுமின் நிலையப் பகுதிகளிலும் விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும், பொதுமக்கள் கூடுமிடங்களிலும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமாக கோ- ஆப்டெக்ஸ் இருந்தாலும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உறுதுணையாக இருக்கிறது. புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், கோவை  கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல பருத்திச் சேலைகள்,  போர்வைகள், படுக்கை விரிப்புகள்,  தலையணை உறைகள்,  வேட்டி, லுங்கி, துண்டு ரகங்களும் விற்பனைக்கு உள்ளன. 30 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்தாண்டில் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையாக  ரூ.2.87 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் ரூ.3.68 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கனவு- நனவுத் திட்டத்தின் கீழ் 11 மாதச் சந்தாத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று, 12 ஆவது மாதத் தொகையை   நிறுவனமே செலுத்தி, மொத்த முதிர்வுத் தொகைக்குத் தேவைப்படும் துணிகளை 30 சதவிகிதத் தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது என்றார் ஆட்சியர் ராசாமணி.
நிகழ்வில்,  கோ ஆப்டெக்ஸ் மேலாளர் ( வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா. சீனிவாசன்,  துணை மண்ட மேலாளர் மு. அன்பழகன், பொதிகை விற்பனை நிலைய மேலாளர் ஆனந்தமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com