வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு

திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரகங்களில் முதல் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டு

திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரகங்களில் முதல் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி புதன்கிழமை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவிலுள்ள பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனத்திடமிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்துக்கு 2 மாதங்களுக்கு முன்  புதிய  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கருவிகள் 6339-மும், கட்டுப்பாட்டுக் கருவிகள் 3,440-மும், வாக்காளர் சரிபார்ப்புக் கருவியும் வரப்பெற்று  ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், ஸ்ரீரங்கம், திருச்சி கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறைபாடுள்ள இயந்திரங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் கே.கள்ளிக்குடி, அளுந்தூர், சேதுராப்பட்டி, பாகனூர், நவலூர் குட்டப்பட்டு, நாச்சிக்குறிச்சி ஊராட்சிகளில்  வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், மரக்கன்று வளர்க்கும் பணி, புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், புதிய தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.1.03 கோடியில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்வகணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. லதா, மங்கலேசுவரி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கம், தேர்தல் துணை வட்டாட்சியர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com