திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை

திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை தீ விபத்து தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை தீ விபத்து தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் பின்பகுதியில் வியாழக்கிழமை தீயணைப்புத்துறை சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. மேலும், ஸ்கை லிப்ட் வாகனமும் வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வேகமாக தீ விபத்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். 
மருத்துவமனையின் 6 ஆவது மாடியில் தீ விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் ஸ்கை லிப்ட் கருவி மூலம் சென்று அங்கு தண்ணீரை அடித்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கீழே வந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பார்வையாளர்கள் தீ விபத்து நடந்துவிட்டதோ என அச்சப்பட்டனர். அருகில் வந்து பார்த்த பிறகே ஒத்தகை நிகழ்வு நடைபெறுகிறது என்பதை அறிந்து நிம்மதியடைந்தனர்.
திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமமூர்த்தி தலைமையில், உதவி அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் தனபால் உள்ளிட்ட 50 பேர் அடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இந்த ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக, நிலைய அலுவலர் தனபால் கூறியது: 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்கள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளில் தீ விபத்து தடுப்பு தொடர்பான ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.
மேலும், கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் பயன்படுத்தி வந்த ஸ்கை லிப்ட் வாகனம் திருச்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து அடுக்கு மாடி கட்டடங்களில் இத்தகைய ஒத்திகையை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையின் புதிய கட்டடமான அடுக்குமாடி கட்டடத்தில் 6 ஆவது மாடியில் விபத்து நடந்தால் மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்த்தப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com