போட்டி நிறைந்த உலகில் சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவசியம்

இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவசியமானது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர்


இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவசியமானது என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத் கணபதி.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஐ.சி.டி. அகாதெமி மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து சில்லறை வணிகம் மற்றும் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
இன்றைய இளைய சமுதாயத்தினர் மனிதவள புரட்சிக்காலத்தின் மிகச் சிறந்த தலைமுறையினராக உள்ளனர். நாம் நம்முடைய 80% நேரங்களில் நம்முடைய 20 % திறன்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த திறனை 100 % ஆக உயர்த்த வேண்டும். அந்த நிலையை அடைவதற்குத் தடையாக உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் பெரும் உதவியாக இருக்கும்.
கல்லூரிகளில் படிக்கும் பாடமும், இதுபோன்ற முகாம்களில் பயிற்சியும் பெற்றால் போதாது. அவற்றை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றிக் கிடைக்கும். தங்களின் இலக்கை அடைய ஒவ்வொரு நாளும் படிப்படியாக இளைய சமுதாயத்தினர் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடையமுடியும். போட்டி நிறைந்த உலகில் சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அவசியமானது என்றார் அவர்.
விழாவுக்குத் தலைமை வகித்து பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா பேசியது:
கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், அவர்களுக்கு தேவையான திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளைத் தொடர்ந்து 25 நாள்கள் அளிக்கும்வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் ஐ.சிடி. அகாதெமியுடன்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறோம்.
1995 ஆம் ஆண்டில் இண்டர்நெட் கிளப் தொடங்கப்பட்ட போது அதை ஆச்சரியமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், இன்றைய நிலையில் இணையம் இல்லாத உலகம் இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சிக் கண்டிருக்கிறோம். மாணவிகள் வகுப்பறைகளில் கற்கும் கல்வியைக் காட்டிலும் வெளியிலும் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமானது என்றார் அவர்.
தமிழ்நாடு ஐ.சி.டி. அகாதெமியின் துணைப் பொது மேலாளர் கே.ஏ.விஜயன் பேசியது: 25 நாள்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். 21ஆவது நாள் முதல் 25 ஆம் நாள் வரை பல்வேறு நிறுவனங்கள் இப்பகுதிக்கு வந்து, தங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற பணியிடங்களுக்குரிய நபர்களைத் தேர்வு செய்வார்கள்.
இதன் மூலம் இங்குப் பயிற்சி பெறும் 54 மாணவிகளுக்கும் பயிற்சி நிறைவில் வேலைவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்றார் விஜயன்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமியும், ஐசிடி அகாதெமி துணைப் பொது மேலாளர் கே.ஏ.விஜயனும் பரிமாறிக் கொண்டனர். நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியின் எம்.சி.ஏ. துறை இயக்குநரும், கணினி அறிவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறைத் தலைவருமான எம். மணிமேகலை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com