தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ. நல்லசாமி தெரிவித்தார்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ. நல்லசாமி தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் வியாழக்கிழமை சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பருவமழையானது சராசரிக்கும் குறைவாகவே பெய்துள்ளது. 2016-இல் 60 சதம் குறைந்தது. 2017இல் 9 சதம் குறைந்தது. இப்போது (2018), 24 சதம் குறைந்துள்ளது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழக உரிமையைப் பெற வேண்டுமெனில் தினந்தோறும் நீர்ப் பங்கீடு மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். நீதிமன்ற தீர்ப்பு, மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு என எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது, கண்துடைப்பாக அமையும். தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய தண்ணீரை தினந்தோறும் திறந்துவிட்டால் மட்டுமே தமிழகம் பலன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. உற்பத்தி செலவு 40 சதம் அதிகரித்துள்ளதால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு ரூ.35 எனவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.45 எனவும் உயர்த்த வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். மாறாக, இலவசங்கள், கடன் தள்ளுபடி, மானியம், மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகை தேவையில்லை. இதேபோல, விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் தேவையில்லை. இலவசத் திட்டங்கள் அனைத்தும் லஞ்சம், ஊழலுக்கே இடமளிக்கும்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக  தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மாநில அரசு நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மணல் கடத்தலைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
பேட்டியின்போது, மகாதானபுரம் வி. ராஜாராம், கே.சி. ஆறுமுகம், ஹேமநாதன், சீனிவாசன், பஞ்சாபிகேசன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com