சமநீதி, சமஉரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்: அருந்ததி ராய்

நாட்டில் வாழும் அனைவருக்கும் சம நீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்தார்.


நாட்டில் வாழும் அனைவருக்கும் சம நீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்தார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான எதிர்த்து நில் மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியது: பாபர் மசூதி இடிப்பு சம்பவம், தவறான பொருளாதார கொள்கையால் உருவான தாராளமயம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்பட்டோரை, மேலும் ஒடுக்கப்பட்டோராக மாற்றும் சக்தியாக உருவெடுத்து நிற்கின்றன. 
அறிவுசார் பல்கலைக் கழகங்கள் தொடங்கி மக்களின் சேவை சார்ந்த பெரு நிறுவனங்கள் வரை அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் மதவாத சக்திகள், கார்ப்பரேட் சக்திகளின் அதிகாரமே மேலோங்கி நிற்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. அறிவாளர்களை மட்டும் வீழ்த்தாமல், மக்களின் அறிவையும் வீழ்த்த வேண்டும் என்ற வகையில் மக்களை சிந்திக்க வைக்காமல் உரிமைகளுக்காக போராடும் நிலையிலேயே வைத்துள்ளனர்.
இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினர், ஆதிவாசிகள், சிறுபான்மையினத்தவர், விவசாயிகள், கம்யூனிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் என தனித்தனியாக அவரவர் உரிமைகளுக்காக போராடி வந்தனர். இப்போது, அனைவரும் ஒன்று சேர்ந்து மதவாத சக்திகள், பெருநிறுவனங்களுக்கு எதிராக போராடும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். 
ஆண்டுக்கு ரூ.2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி, அதனை செயல்படுத்தவில்லை. மாறாக பெருநிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. அதானியின் சொத்துகள் மட்டும் 125 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன. 75 சதவீத பொதுமக்களிடம் இருக்க வேண்டிய சொத்துகள் 9 பெருநிறுவன முதலாளிகள் வசம் உள்ளன. தமிழக அரசியலிலும், மத்தியில் காங்கிரஸ் மீதும் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்தை முன் வைக்கும் பாஜக, பெருநிறுவனங்களின் முதலாளித்துவத்தில் எழும் வாரிசு அரசியலை பற்றி கவலைப்படவில்லை.  வரும் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தாலும் அனைத்து நிலைகளிலும் கட்டமைத்துள்ள ஒடுக்குமுறை பயங்கரவாதம் ஆபத்தாகவே உள்ளன. மதவாத சக்திகளை வீழ்த்தாவிட்டால் அந்த சக்திகளை அனுமதித்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். சம நீதி, சம உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்.
மாநாட்டுக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. ராஜு தலைமை வகித்தார். உரிமை தமிழ்த் தேச இதழின் ஆசிரியர் தியாகு, மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச் செயலர் மருதையன், வழக்குரைஞர்கள் பாலன், ஹரிராகவன், அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகி வரதராஜன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, செழியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com