திருச்சிக்கு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: தேமுதிக வேட்பாளர் உறுதி

திருச்சியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) ஏற்படுத்தப்படும் என தேமுதிக வேட்பாளரும், மருத்துவமருமான வி. இளங்கோவன் தெரிவித்தார்.

திருச்சியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) ஏற்படுத்தப்படும் என தேமுதிக வேட்பாளரும், மருத்துவமருமான வி. இளங்கோவன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில், திருச்சி மக்களவைத் தொகுதியானது தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில், தருமபுரியைச் சேர்ந்த மருத்துவர் வி. இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மாநகர் மாவட்ட செயலருமான ப. குமார் பேசியது:
திருச்சி மக்களவைத் தொகுதி தொடர்ந்து 2 முறை அதிமுக வெற்றி பெற்ற தொகுதியாகும். கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததில் திருவரங்கம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:
 தமிழக நலன் கருதியும், தமிழக மக்களின் உரிமைகளை மத்தியில் கேட்டு பெறவும் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்துள்ளோம். அனைத்து சமூகத்துக்குமான கட்சியாக அதிமுக உள்ளது. கடந்த தேர்தலைப் போன்று இந்த முறையில் திருச்சியில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார்.
தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன் பேசியது:
திருச்சி அரசு மருத்துவமனையில்தான் 8 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனது மகன், மகள் பிறந்ததும் திருச்சியில்தான். மகளைத் திருமணம் செய்து கொடுத்ததும் திருச்சியில்தான். எனவே, திருச்சியுடன் அதிக தொடர்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாக உள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றால் திருச்சிக்கு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கொண்டு வரப்படும். அதிமுக அறிவித்துள்ள திட்டங்களும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதனடிப்படையில் தேர்தல் பிரசாரத்தை கட்டமைக்கவுள்ளோம் என்றார் அவர்.
கூட்டத்தில், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி மற்றும் பாஜக, புதிய தமிழகம், பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com