தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு!

தமிழகத்தில் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
 இங்கு மாணவிகளுக்கு தனியாக அரசுப் பள்ளி தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
 இதுகுறித்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவிகளைக் கொண்டு, 23.8.2018 அன்று அந்தப் பள்ளி வளாகத்திலேயே உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் சுமார் 190 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியை மற்றும் 8 ஆசிரியைகள் பணியமர்த்தப்பட்டனர்.
 ஆனால், இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து விசாரித்ததில் தெரிய வந்ததாவது:
 தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பள்ளிகள் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
 இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான விரைவு ஊதிய ஆணை பள்ளிக் கல்வித் துறையிலிருந்து வராததால், கருவூலத் துறை அதிகாரிகள் ஊதியம் வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
 இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது:
 தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் இதுவரை வரவில்லை. இதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொண்டு பள்ளிக் கல்வி இயக்ககம், கருவூலத் துறை மற்றும் சென்னை தலைமைச் செயலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து "இ-பே' உத்தரவு வரவேண்டும் என்றார் அவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com