சிதம்பரம் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கஜா புயல் தொடர்பாக, சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

கஜா புயல் தொடர்பாக, சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
 சிதம்பரம் வட்டம், திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தவர், அங்கு உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, காய்கறிகள் தயார் நிலையில் இருப்பதை பார்வையிட்டார்.
 பின்னர், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை கடற்கரையோர பகுதியில் படகுகள் கயிறுகளால் கட்டப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மீன் வலைகளை அருகேயுள்ள மீன்வலை பழுது நீக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என மீனவர்களை கேட்டுக் கொண்டார். மேலும் பரங்கிப்பேட்டையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை பார்வையிட்டார்.
 ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மக்கள்-தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com