நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கஜா' புயல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் அனைத்து அமைச்சர்களையும், மூத்த அதிகாரிகளையும் களத்தில் இறக்கி தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனால், சில கட்சிகள், குறிப்பாக கழகங்கள் விரைவில் காணாமல்போகும். அதுவும் நடிகர்கள் கட்சி தொடங்கியதால் அல்லாமல், அந்தந்தக் கட்சிகளின் நிலைப்பாட்டால் காணாமல் போகும். நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் உண்மையிலேயே செல்வாக்கு பெற்ற மனிதராக உள்ளார். அவரை பாஜகவுக்கு வருமாறு அழைத்துள்ளோம். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக அணி அதிக இடங்களைக் கைப்பற்றும். 
வாஜ்பாய் அரசுக்குப் பிறகு மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் தமிழகத்தில் 3 துறைமுகங்கள் உள்ளன. தற்போது, புதிதாக தொடங்கப்படும் 4 துறைமுகங்களில் ஒன்று கன்னியாகுமரியில் ரூ.28 ஆயிரம் கோடியில் அமையவுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறை மூலம் தொடங்கப்படும் தளவாடங்கள் தயாரிக்கும் 2 ஆலைகளில் ஒன்று தமிழகத்தில் அமையவுள்ளது. ரூ.1,800 கோடியில் கன்னியாகுமரி - தூத்துக்குடி இடையே கிழக்கு கடற்கரைச் சாலைப் பணி நடைபெற்று வருகிறது என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
"பாஜகவை பாம்பின் நஞ்சு உள்ள கட்சி' என தொல்.திருமாவளவன் விமர்சித்தது குறித்து, அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் கூறிய பதில்: திருமாவளவனின் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கட்சி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபோது, அன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கூட கொண்டாடாமல் புதுதில்லிக்கு வந்து அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய இரு தலைவர்களில் ஒருவர் அவர். வாஜ்பாய் ஒரு மாமனிதர் என்று கூறினார். எந்தச் சிந்தனையில் தற்போது இந்தக் கருத்தை கூறினார் எனத் தெரியவில்லை. சர்தார் வல்லபபாய் படேலுக்கு சிலை வைத்தது குறித்தும் திருமாவளவன் விமர்சித்துள்ளார். விடுதலைக்குப் பிந்தைய 3 ஆண்டுகளில் 600 சமஸ்தானங்களை இணைத்து நாட்டை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல். அவருக்கு பிரம்மாண்ட சிலை வைத்ததில் தவறு இல்லை என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
மாநில பிரசார அணிச் செயலர் வே.ராஜரத்தினம், மாவட்டத் தலைவர் தாமரை மணிகண்டன், கோட்ட பொறுப்பாளர் சுகுமாறன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.திருமாறன், நகரத் தலைவர் கனகசபை, ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், கோபிநாத், தில்லைசீனு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com