மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கோரி கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி, பண்ருட்டியில் அனைத்துக் கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி, பண்ருட்டியில் அனைத்துக் கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, பண்ருட்டி நகர்மன்ற அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத் தலைவர் பொன்குமார்  தொடக்கி வைத்தார். பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே முடிவடைந்தது. 
இதையடுத்து, அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலர் வி.சுப்பராயலு தலைமை வகித்தார். 
பண்ருட்டி கட்டட பொறியாளர்கள் சங்கத் தலைவர் கே.வேணுகோபால், கடலூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கச் செயலர் எஸ்.அருள்பிரகாஷ், பண்ருட்டி கட்டட வரைவாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், மணல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியப் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய சங்கத் தலைவர் பொன்குமார் பேசியதாவது: விவசாயத் தொழில் முடங்கியுள்ள நிலையில், அதை சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியது கட்டுமானத் துறைதான். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. 6 ஆண்டு காலமாக மணல் பிரச்னை தொடர்கிறது. தமிழகத்தில் மணல் படுகை உள்ள இடங்களில் முறையாக 3 அடி ஆழத்துக்கு மணல் எடுக்க அனுமதித்து, நியாயமாக விலை நிர்ணயித்தால் மணல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், திமுக நகரச் செயலர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கட்டட சங்க மாவட்டத் தலைவர் வி.சந்திரன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் டி.கே.பன்னீர்செல்வம், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே.நாகலிங்கம், சிமென்ட் மற்றும் கம்பி விற்பனையாளர் சங்கத் தலைவர் ராஜாசுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் வட்டாட்சியர் எம்.ஆறுமுகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 
அப்போது, மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com