இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: உணவு, குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தல்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால்,

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் உணவு, குடிநீரை சேமித்து வைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற நிலையில், வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று தமிழகம், புதுவை நோக்கி நகரக்கூடுமென கடலூர் வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலூருக்கு தெற்கே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை(நவ.21) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
இந்தப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும். கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் மேற்கூறிய நாள்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 25.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: குடிதாங்கி 20, கடலூர் 13, காட்டுமன்னார்கோவில் 10, வடக்குத்து 8, லால்பேட்டை 7, பண்ருட்டி 5.2, ஆட்சியர் அலுவலகம், பெலாந்துறை தலா 4.5, அண்ணாமலை நகர், குறிஞ்சிப்பாடி தலா 4, புவனகிரி 3. அதேபோல, குப்பநத்தம், விருத்தாசலம், கீழச்செருவாய், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், கொத்தவாச்சேரி பகுதிகளிலும் பரவலாக மழை பதிவானது.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை: இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 
கடலூர் மாவட்டத்தில் நவ. 21-ஆம் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருள்களை தயாராக வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com