புதன்கிழமை 14 நவம்பர் 2018

ஐஸ் கட்டி தயாரிப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுமா?

By  ச.முத்துக்குமார், கடலூர்,| DIN | Published: 11th September 2018 09:18 AM

ஐஸ் கட்டி தயாரிப்பு நிறுவனங்களில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என கண்காணிக்கப்பட வேண்டுமென பொதுநல அமைப்புகள் வலியுறுத்தின.
 இன்றைய நவீன காலகட்டத்தில் ஐஸ் கட்டிகளால் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உண்பது தவிர்க்க முடியாதது. குறிப்பாக வெளியிடங்களில் அருந்தும் பானங்கள், பழச்சாறுகளில் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 இந்த ஐஸ் கட்டிகள் சுத்தமான நீரில் தயாரிக்கப்பட்டவையா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானது.
 இதுபோன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இந்திய அரசானது உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் அனைத்தும் இயற்கையான வெள்ளை நிறத்திலும், மீன்கள், இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் அனைத்தும் இயற்கையான நிறமி சேர்க்கப்பட்ட ஊதா நிறத்திலும் இருக்க வேண்டும் என்று அறிவித்தது.
 ஏனெனில், உணவுப் பொருளுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை நல்ல தண்ணீரைக் கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில் பதப்படுத்துதலுக்காக மட்டும் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளை சாதாரண தண்ணீரை பயன்படுத்தி தயாரிக்கலாம். இதை வேறுபடுத்திக் காட்டவே இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை விரைவில் அமல்படுத்துவதோடு, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
 இதுதொடர்பாக கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 50 ஐஸ் கட்டி தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை அனைத்து ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மூலமாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும், இதுதொடர்பாக கூட்டமும் நடத்தி அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும் என்றார் அவர்.
 

More from the section

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நல உதவி
அதிமுக கொடியேற்று விழா
பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது
குப்பை வண்டிகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  துப்புரவுத் தொழிலாளர்கள்
மணல் குவாரி அமைக்கக் கோரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்