18 நவம்பர் 2018

செப்.15-இல் சைக்கிள் போட்டி

DIN | Published: 12th September 2018 08:54 AM

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு,  வருகிற 15-ஆம் தேதி சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வோர் ஆண்டும் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு  கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரி அருகே வெள்ளி கடற்கரையில் போட்டிகள்  நடைபெறும்.
 போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக 13, 15, 17 வயது பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ., 15, 17 வயதுக்குள்பட்ட மாணவர், மாணவிகளுக்கு முறையே 20 கி.மீ., 15 கி.மீ. தொலைவுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்போர் வயதுச்  சான்றை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும்.  இதற்கான நுழைவுப் படிவத்தை மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டுவருதல் வேண்டும்.
 முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும்  வழங்கப்படும். 4 முதல் 10-ஆவது இடம் வரை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். 
போட்டிகளில் கலந்துகொள்வோர் சாதாரண மிதிவண்டியை தாங்களே கொண்டு வருதல் வேண்டும்.  போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே போட்டி நடைபெறும் இடத்தில்  தயார் நிலையில் இருக்க வேண்டும். போட்டியில்  கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வருகிற 14- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி  கைது


வணிக நிறுவனங்கள்: தமிழில் பெயர்ப் பலகை அமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

புயல் நிவாரண மருத்துவ முகாம்
கஜா புயல் மீட்புப் பணி: 3 மாவட்டங்களுக்கு பொருள்கள் அனுப்பிவைப்பு
நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது: பொன்.ராதாகிருஷ்ணன்