அதிமுக அரசுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக அரசைக் கண்டித்து, கடலூரில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அரசைக் கண்டித்து, கடலூரில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 குட்கா ஊழல், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள், அரசுப் பேருந்துகள் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அந்தக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
 அதன்படி கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக உள்ளது. அதே நேரத்தில் ஊழலில் கரைகண்டுள்ளது. கடலூர் முதுநகரில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்ட சாலைகள் 6 மாதங்களில் சேதமடைந்துள்ளன.
 திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், தற்போதைய அரசில் ஊழல், பேருந்துக் கட்டணம் உயர்வு, மணல் திருட்டு ஆகியவைதான் நடைபெறுகிறது.
 கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க பொதுப் பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி நிதியில் முறைகேடு நடைபெறுகிறது என்றார் அவர்.
 ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் பணிக் குழுச் செயலர் இள.புகழேந்தி, துரை.கி.சரவணன்
 எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், ஒன்றியச் செயலர்கள் சிவக்குமார், சுப்புராம், காசிராஜன், ராயர், மதியழகன், முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன், பொதுக்குழு உறுப்பினர் பி.பாலமுருகன், நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 இதேபோல, கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவுமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தார்.
 இதில், நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, துணைச் செயலர்கள் அரங்க.பாலகிருஷ்ணன், தணிகைச் செல்வம், ஆனந்தி சரவணன், முன்னாள் எம்எல்ஏக்கள் குழந்தை தமிழரசன், பி.வி.பி.முத்துக்குமார், நகரச் செயலர்கள் க.தண்டபாணி, கே.ராஜேந்திரன், பக்கிரிசாமி, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com