கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய்களில் தொடரும் உடைப்பு

கடலூர் நகரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர்கிறது.

கடலூர் நகரில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர்கிறது.
 கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு தற்போது மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் இணைக்கப்பட்டு, அதிலிருந்து குடிநீர் விநியோகிப்பதற்காக புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 முதல்கட்டமாக கடலூர் நகரில் ஒன்று முதல் 7-ஆவது வார்டு வரையிலான பகுதிகளைச் சேர்ந்த செம்மண்டலம், தீபன் நகர், சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 13 கி.மீ. தொலைவுக்கு புதிய குழாய்கள் அமைத்து, பழைய குழாய்கள் வழியாக வரும் தண்ணீரை புதிய குழாய்கள் வழியாக திருப்பிவிடும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் தாமதமாக கடந்த 14-ஆம் தேதி முடிக்கப்பட்டதால், 5 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது.
 புதிய குழாய்கள் வழியாக கடந்த 15-ஆம் தேதி குடிநீர் விநியோகம் தொடங்கிய நிலையில், தீபன்நகர், சாவடி ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதையடுத்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு திங்கள்கிழமை (செப்.17) குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியது. அப்போது சுப்பையா நகரில் ஓர் இடத்தில் பதிக்கப்பட்ட குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையில் வீணானது. இதையடுத்து குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் மீண்டும் நிறுத்தினர்.
 தண்ணீர் வெளியேறிய இடத்தை இயந்திரம் மூலமாக தோண்டியபோதுதான் அந்த பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்காமல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். உடனே அந்த இடத்தில் புதிய குழாய் பதிக்கப்பட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் தொடங்கியது.
 ஆனாலும், தீபன்நகரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து, மீண்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளில் கடந்த 9 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com