ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.
கடலூர், நாகை மாவட்ட டெல்டா பகுதிகளில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில விவசாயச் சங்கத் துணைச் செயலர் மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் மாதவன், தலைவர் ரவிச்சந்திரன், மீனவர் விடுதலை வேங்கை சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலர் பசுமைவளவன், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பெ.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயச் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சேகர் உள்பட கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர், நாகை மாவட்ட டெல்டா பகுதிகளில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூன்று மண்டலமாக வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது. 
இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வருகிற 24-ஆம் தேதி டெல்லியில் வழங்க உள்ளது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஷேல்கேஸ், மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தடை செய்தார். ஆனால், தற்போதைய தமிழக அரசு மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மெüனம் காத்து வருகிறது.
இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து திட்டத்தை ரத்து செய்யக் கோரி வலியுறுத்த உள்ளோம். 
இதையும் மீறி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடத்தப்படும்.
இந்தத் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நாகை, கடலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், டெல்டா பகுதிகளில் மீன்வளம், விவசாயம், நீர், காற்று, உணவு, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com