வீரநாராயணப் பெருமாள் கோயில் குளம் சீரமைக்கப்படுமா?

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீரநாராயணப் பெருமாள் கோயில் திருக்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீரநாராயணப் பெருமாள் கோயில் திருக்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள், அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 புகழ் பெற்ற இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். திருப்பதி உள்ளிட்ட பல்வேறு வைணவ தலங்களிருந்து ஜீயர் சுவாமிகள் வருகை தந்து வீரநாராயணப் பெருமாளை வணங்கி, ஆன்மிகச் சொற்பொழிவாற்றுவர்.
 கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது, எதிரே உள்ள வேதபுஷ்கரணி என்று அழைக்கபடும் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்தக் குளத்துக்கு வடவாறு வழியாகத் தண்ணீர் வருகிறது.
 இந்த நிலையில், தெப்பத் திருவிழா கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை. குளத்தில் தண்ணீர் தேக்குவதில் பேரூராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தாதே இதற்குக் காரணம் என பக்தர்கள் கூறினர்.
 மேலும், இந்தக் குளத்தில் தனியார் ஒப்பந்ததாரரிடம் மீன் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.
 மீன் குஞ்சுகள் வளர்வதற்கு ஏதுவாக குறைந்த தண்ணீரை நிரப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
 நிகழாண்டு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்போது வடவாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
 எனவே, கோயில் குளத்தில் கூடுதல் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் பேரூராட்சி நிர்வாகச் செயல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், இதுவரை தண்ணீர் நிரப்பப்படவில்லையாம்.
 இதனால், குளத்தின் தூய்மை கெட்டு, தண்ணீர் அசுத்தம் நிரம்பியதாக உள்ளது. மேலும், குளக் கரை படித்துறைகளில் புல், பூண்டுகள் வளர்ந்துள்ளன.
 பெருமாளுக்கு மிகவும் விஷேசமான புரட்டாசி மாதத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 இதுகுறித்து மீன் வளர்க்கும் ஒப்பந்ததாரிடம் கேட்ட போது, மீன் குஞ்சுகள் வளர குறைந்த அளவே தண்ணீர் இருக்க வேண்டும்.
 குளத்தில் முழுவதும் நீரை நிரப்பினால் குறிப்பிட்ட காலத்துக்குள் மீன்களை வளர்க்க முடியாது என்றார்.
 புகழ் பெற்ற கோயில் குளத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாமலும், தெப்பத் திருவிழாவை நடத்த முடியாமலும் இருப்பது பலரை வேதனையடையச் செய்துள்ளது.
 எனவே, மாவட்ட ஆட்சியர், பேருராட்சி உதவி இயக்குநர் ஆகியோர் தலையிட்டு, உடனடியாக கோயில் குளத்தின் சுற்றுப் பகுதிகள், படித்துறை ஆகியவற்றைச் சுத்தம் செய்து, தெப்பத் திருவிழாவை நடத்தும் அளவுக்கு நீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com