ஆதி திராவிடர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள்

ஆதி திராவிடர்களுக்கு தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

ஆதி திராவிடர்களுக்கு தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலமாக ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இணையதளம் மூலம் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரையிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சமாகவும் இருக்க வேண்டும்.
அதன்படி, நிலம் வழங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில் முனைவோர் திட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கவும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை, மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 
மேலும், சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி உதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி, தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த நிதி உதவிகளைப் பெற தாட்கோ இணையதள முகவரியில்   (http://application.tahdco.com) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ் எண், சாதிச் சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண் மற்றும் நிலம் வாங்குதல் திட்டத்தில் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பதிவு செய்யலாம். இதற்காக பயனாளிகளிடம் ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். எனவே, தாட்கோ திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர் இனத்தினர் முன்வர வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com