ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி: ஆட்சியரகத்தில் குவிந்த மனுக்கள்

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரளானோர் மனு அளித்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திரளானோர் மனு அளித்தனர்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார். 

இதற்கான பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதில், ஏற்கெனவே அரசிடம் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் புள்ளி விவரங்களை சரிபார்த்து, அதனை "இ-மதி' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் பின்னர் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படும்.

இந்த நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் தங்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா, விடுபட்டுள்ளதா என்ற விவரத்தை பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதனை, சிலர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட சிலரது பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்து தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வழங்கப்பட்ட மனுக்களில் சிறப்பு நிதி உதவி கோரி வரப்பெற்ற மனுக்களே அதிகம் என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களிலிருந்தும் கூட்டம், கூட்டமாக வந்த பொதுமக்கள் இந்த மனுக்களை அளித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதாகவும், ஆனால், கணக்கெடுப்பில் தங்களது பெயர் விடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

வழக்கமாக பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 300 மனுக்கள் வரை பெறப்படும் நிலையில், திங்கள்கிழமை கூடுதலாக 150 மனுக்கள் பெறப்பட்டன. இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கக் கூடுமென அரசுத் துறையினர் தெரிவித்தனர்.

தர்னா: புவனகிரி வட்டம், காட்டுக்கூடலூர் கிராமத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டுள்ளதாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com