1,198 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் : இன்றும் நடைபெறுகிறது

கடலூர் மாவட்டத்தில் 1,198 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 


கடலூர் மாவட்டத்தில் 1,198 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. 
 வருகிற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற அடிப்படையில் சிறப்பு வாக்காளர் முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. 
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,198 வாக்குச் சாவடி மையங்களில் சனிக்கிழமை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், கடலூர் திருப்பாதிரிபுலியூர், கோண்டூர் வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 பின்னர் அவர் கூறியதாவது: கடந்த ஜன.1-ஆம் தேதிப்படி 18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் 4 சிறப்பு வாக்காளர் முகாம்கள் நடத்தப்பட்டு, புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், பெயர் நீக்கம் மேற்கொள்ளப்பட்டது. 
இதனடிப்படையில் ஜன.31-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி கடலூர் மாவட்டத்தில் 20,36,076 வாக்காளர்கள் உள்ளனர். 
தேர்தலுக்கு முன்பு தூய்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் 18-19 வயதுக்காரர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது பெயரை வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன், கடலூர் வட்டாட்சியர் பா.சத்தியன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com