கடலூர்: 8 முறை காங்கிரஸ் வெற்றி

தென்னாற்காடு மாவட்டம் என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு

தென்னாற்காடு மாவட்டம் என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முன்பாக கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளும், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளும் அடங்கியிருந்தன. மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்தத் தொகுதி கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.
 இந்தத் தொகுதியில் முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். எனினும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.முத்துக்குமாரசாமி நாயுடு, எஸ்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். அதன்பின்னர், 1962-ஆம் ஆண்டில் ராமபத்ர நாயுடுவும், 1967-ஆம் ஆண்டில் வி.கே.கவுண்டரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், 1971-ஆம் ஆண்டில் எஸ்.ராதாகிருஷ்ணன், 1977-இல் பூவராகன், 1980-இல் முத்துக்குமரன், 1984-இல் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், 1989-இல் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், 1991-இல் கலியபெருமாள் ஆகியோர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பதிவு செய்தனர்.
 காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த ஜி.கே.மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போது கடலூர் தொகுதியில் தமாகா வேட்பாளர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய அதிமுக அரசின் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அண்ணன் எம்.சி.தாமோதரன் 1998-ஆம் ஆண்டில் கடலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அதிமுகவின் முதல் வெற்றியை அவர் பதிவு செய்தார்.
 ஆனாலும், ஒரே ஆண்டில் இந்த வெற்றி திமுக வசமானது. 1999-ஆம் ஆண்டில் ஆதிசங்கர் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த கே.வேங்கடபதி 2004-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். 2009-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தத் தொகுதியைப் பெற்றது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி, அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத்தை தோற்கடித்தார். 2014-ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார்.
 இவ்வாறு 1951-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் கடலூர் தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 8 முறையும், திமுக 4 முறையும், தமாகா ஒரு முறையும், அதிமுக 2 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். எனினும், 2014-ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியில் 27 ஆயிரத்துக்கு குறைவான வாக்குகளை பெற்று வைப்புத் தொகையை இழந்தது.
 தற்போதைய கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, தேர்தலில் கடலூர் மாவட்ட பிரச்னைகள் முழுமையாக எதிரொலிக்கும்.
 கடலூர் மக்களவைத் தொகுதியில் தற்போது 13,42,320 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண்கள் 6,77,928 பேர் உள்ளனர். ஆண்கள் 6,64,313 பேரும், இதரர் 79 பேரும் உள்ளனர். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர் மாவட்டம் முழுவதும் (9 சட்டப் பேரவைத் தொகுதிகள்) 26 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கிராமப் புறங்களில் 66 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். எனவே, கிராமப்புறம் சார்ந்த தொகுதியாக கடலூர் உள்ளது.
 கடலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கடலூர், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக, விருத்தாசலத்தில் அமமுக ஆதரவு, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி தொகுதிகளில் திமுகவினர் எம்எல்ஏக்களாக உள்ளனர். எனவே, கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவின் அடிப்படையில் அதிமுக, திமுக கட்சிகள் சம பலத்தில் உள்ளன.
 அமமுகவின் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகே தெரிய வரும். இந்தத் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் சுமார் 35 சதவீதம் பேர், தலித் சமூகத்தினர் 32 சதவீதம் பேர் உள்ளனர். கடலூர் பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மீனவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் பரவலாக முஸ்லிம்கள் உள்ளனர்.
 தற்போதைய தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 திமுக கூட்டணியில் அந்தக் கட்சி வேட்பாளரே களம் காண்கிறார். இந்தக் கூட்டணிக்கு தி.வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
 நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, என்.எல்.சி.யில் உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் வேலை வழங்காதது, வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாவட்டத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் அறிவிப்பு, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காதது, விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காதது, அடிக்கடி இயற்கை இடர்பாடுகளைச் சந்திக்கும் நிலை, மீனவர்களின் பிரச்னைகள் ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
 -ச.முத்துக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com