நுழைவு வாயில் அமைக்கும் பணி: காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையே வாக்குவாதம்

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கத்தில் நுழைவு வாயில் அமைக்கும் பணி தொடர்பாக காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் சூழல் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கத்தில் நுழைவு வாயில் அமைக்கும் பணி தொடர்பாக காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் சூழல் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் அம்பேத்கர் சிலை மற்றும் நுழைவுவாயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 5 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. 
பணியை அமைச்சர் கந்தசாமி தொடக்கிவைத்தார். என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, நிர்வாகி லட்சுமிகாந்தன் ஆகியோரும் பங்கேற்றனர். 
இந்த நிலையில், அங்குள்ள பிள்ளையார்கோயிலை அகற்றிவிட்டு நுழைவு வாயில் கட்ட திட்ட வரையறை செய்யப்பட்டிருந்ததாகத் கூறப்படுகிறது. இதற்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கூட்டத்தை நடத்தினர். இதற்குப் போட்டியாக கிராம பஞ்சாயத்தார் மற்றும் காங்கிரஸாரும் கூட்டம் போட்டு திட்டமிட்டபடி அதே இடத்தில் நுழைவு வாயில் கட்ட அனுமதிப்பது என்று முடிவெடுத்தனர். இதற்கும் என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், நுழைவு வாயில் மற்றும் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியை அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் ரகுநாதன், பாகூர் வட்டாட்சியர் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
அங்குள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதில் சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு,  லட்சுமிகாந்தன் ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மதில் சுவரை இடித்து அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்று அதிகாரிகள், போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர். 
இதையடுத்து அவரை பாகூர் வட்டாட்சியர் கார்த்திகேயன் சமாதானம் செய்தார். இதை முன்னாள் அமைச்சர் ராஜவேலு ஏற்கவில்லை.  இதைத் தொடர்ந்து அங்கு ராஜவேலுவின் ஆதரவாளர்களும், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்களும் திரண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க காவல் ஆய்வாளர் கெளதம் சிவகணேஷ் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com